சிவகார்த்திகேயன் - ப்ரியங்கா அருள்மோகன் நடிப்பில் வெளியாகி 15 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம்‘டாக்டர்’.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தீபாவளிக்கு முன்னதாகவே கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 126 திரையரங்குகளில் தற்போதுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தல் மாபியா பற்றிய அவல நகைச்சுவை படமாக வெளியான இதில், சிரிப்புக்கு யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் கவனம் ஈர்த்தனர். திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகான டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியிருந்தது. டாக்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை பன்னாட்டு ஓடிடியான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியிருந்தது. ஒப்பந்தப்படி 30 நாட்கள் திரையரங்க வெளியீட்டுப்பின் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் டாக்டர் வெளியானது. தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் திரையரங்கில் வெளியாகி அங்கும் ஹிட் அடித்தது.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களின் வரிசையில் ‘டாக்டர்’ படமும், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வெர்ஷன் ‘வருண் டாக்டர்’ படமும் தற்போது டாப் 10 படங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளன. இதனை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.