இருபத்தைந்து தேசிய விருதுகளை வென்ற ஒரே இந்திய இயக்குநர் சத்யஜித் ராய். அதேபோல், சத்யஜித் ராய் ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இயக்குநரும்தான்.
அவரது நூற்றாண்டுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் ஒரு காரியத்தை சத்தமில்லாமல் செய்துள்ளது இந்திய ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம். அதாவது, சத்யஜித் ராய் பெயரில் சர்வதேச விருது ஒன்றை நிறுவியிருக்கிறது. இந்த விருது முழுவதும் இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் திரையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
‘பதேர் பாஞ்சாலி’ மூலம் இந்திய சமூதாயத்தின் ஆன்மாவை உலகுக்குக் காட்டியவர் சத்யஜித் ராய். ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அவர் எடுத்த இந்தப் படம்தான் இன்றும் யதார்த்த சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக சிலாகிக்கப்படுகிறது. அவர் படங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாகக் கருதப்படக் காரணம் அவர் இந்திய மண்ணை, அதன் சாமானிய மனிதர்களைத்தாம் திரையில் பிரதிபலித்தார். அதுவே அவருக்குச் சர்வதேச அங்கீகாரம் ஈட்டித் தந்தது. அப்படிப்பட்டவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் தொடங்கி பாரத ரத்னாவரை அநேக விருதுகளை வழங்கி இந்தியா தனக்குப் பெருமைதேடிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சாதனையாளரின் பெயரால், பிறநாட்டு திரைத்துறைச் சாதனையாளர்களுக்கு ஏன் விருது வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த இந்திய ஒன்றிய அரசின் தகவல் ஒளிப்பரப்பு அமைச்சகம், விருதையும் நிறுவி, முதல் விருதை இரண்டு சர்வதேச ஆளுமைகளுக்கு அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சத்தியஜித் ராய் வாழ்நாள் சாதனையாளர் விருது ஹங்கேரி நாட்டு திரைப்பட இயக்குநர் இஸ்துவான் சாபோ, ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டீன் ஸ்கார்சசீ ஆகிய இருவருக்கு அறிவித்திருக்கிறது. இந்த விருதை நவம்பர் 20-ஆம் தொடங்கி 28-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 52-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், வழங்கப்படவிருப்பதாக ஒன்றிய தகவல் ஒளிப்பரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து உலக சமூகத்துக்கு ஒரு ஆஸ்கார்!