தசாவதானி எனப் புகழ்பெற்றவர் டி.ராஜேந்தர். ஒருதலை ராகம் படத்தை இயக்கியபோது அதில் நடித்த உஷாவை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு சிலம்பரசன். குறளரசன், இலக்கியா என மூன்று பிள்ளைகள். இவர்களில் சிம்பு இன்று முதன்மைக் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது படங்கள் 75 ரூபாய்க்கு குறையாமல் வசூல் செய்கின்றன. பல்வேறு பிரச்சினைகளிலிருந்து மீண்ட சிம்பு, தற்போது மாநாடு படத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த இந்தப் படம், சீமானுக்கு சிம்பு ஆதரவு தெரிவித்து வருகிறார் என்கிற காரணத்துக்காக அவரது பட வெளியீட்ட தடுக்க ஆளுங்கட்சித் தரப்பில் பலவித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறுப்படுகிறது. இப்பட வெளியீடு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் இன்று புகார் அளித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த உஷா பேசியதாவது:
“ முன்னாள் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ‘அஅஅ’ என்ற ஒரு படம் எடுத்திருந்தார் அந்த படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது அந்த நஷ்டத்தை மைக்கேல் ராயப்பன் தான் தரவேண்டும். ஆனால் நடிகர் சிலம்பரசன் தான் தரவேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.
முரளி தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சிலம்பரசன் ஒவ்வொருமுறை படங்கள் நடிக்கத் தொடங்கும்போதும் பஞ்சாயத்துக்கு எங்களை கூப்பிட்டு பல கோடிகளைப் பெற்றுக் கொண்ட பிறகுதான் படத்தில் நடிப்பதற்கு அனுமதிக்கிறார்கள். அதேபோல் முடியும் பொழுதும் படத்தை வெளியிடுவதற்கு ரெட் கார்டு என்ற பெயரில் படத்திற்கு தடைப்போட்டு பல கோடி தரவேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.
இப்பொழுது புதியதாக அருள்பதி என்பவர் தமிழ் திரைப்பட நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து ஒரு இருபது, இருபத்தைந்து பேர் வைத்து சிலம்பரசன் எந்த படத்தையும் ரிலீஸ் பண்ணவிடமால் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர், பக்க பலமாக எங்கள் பக்கம் அரசாங்கம் இருக்கிறது என்று ஒரு மாயையை ஏற்படுத்த இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அரசாங்கம் நல்லமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த அரசாங்கத்திற்கு கலங்கம் விளைவிக்க கூடிய வகையில் இவர்களுடைய செயல்பாடு இருந்து வருகிறது. இதை முதல்வர் கவனத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்வோம் அதற்காக அவருடைய வீட்டு வாசலிலும் உண்ணாவிரதம் இருப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.
இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்தால் பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுப்பதற்காக இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கமிஷனர் தெரிவித்தார் நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன். சிலம்பரசன் நிஜமாகவே யாருக்காவது பணம் கொடுக்க வேண்டுமென்றால் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் யாருக்கும் தர வேண்டிய நிலைமை இல்லை" என தெரிவித்தார். முதல்வர் வீட்டின் முன்பு உஷா ராஜேந்தர் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலைமை இருக்காது என்று நம்புவதாக நம் தமிழர் கட்சி வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.