பிரபல பாலிவுட் இயக்குநர் லச்மன் உத்கர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்திப் படம் ‘மிமி’. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பரம் சுந்தரி’ என்கிற பாடல் இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆனதுடன் மொழி தெரியாத அயல்நாட்டவரையும் கவர்ந்தது. இந்நிலையில் மிமி படத்தின் பின்னணி இசையை 64-வது கிராமி விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். கிராமி விருதுகள் இசைக்கான ஆஸ்கர் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இது முக்கியம் பெறுவதாக ரஹ்மானின் ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் வாழ்த்திவருகிறார்கள்.
இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் - இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். தற்போது மீண்டும் அவருடைய இசை கிராமி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டிருப்பது பற்றிய தன்னுடைய சமூக வலைப்பதிவில் “மிமி படத்துக்கு நான் அமைத்த சவுண்ட் டிராக் 64 வது கிராமி விருதுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ரஹ்மான் கூறியிருக்கிறார்.