‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம், ஹாலிவுட்டின் அதிரடியான அறிவியல் புனைவுப் படங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
அதேபோல், ரஷ்யாவின் ‘காஸ்மாஸ்’ வரிசைப் படங்கள் ஹாலிவுட்டுக்கே சவால் விடுபவை. இரண்டு நாடுகளும் விண்வெளி அறிவியலில் போட்டி போட்டு நிற்பதைப் போலவே, விண்வெளியில் முதன் முதலில் யார் படப்பிடிப்பு நடத்துவது என்பதிலும் போட்டி போட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவை முந்திக்கொண்டிருக்கிறது ரஷ்யா. இதுவரையிலான விண்வெளி அறிவியல் புனைவுப் படங்களின் படப்பிடிப்புகள் விண்வெளி போன்ற செட்டுகள், விஸுவல் எஃபெக்ட்ஸ் எனப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலமே சாத்தியமாகி வந்துள்ளது.
இந்த நிலையை மாற்றுவதென்று தற்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிபோட்டு களத்தில் குதித்துள்ளன. இந்த விண்வெளியில் படப்பிடிப்பு முயற்சிக்கு முதலில் விதை போட்டவர் ஹாலிவுட் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ் தான். தற்போது இவர் நடித்து வரும் மிஷன் இம்பாசிபிள் புதிய பாகத்தின் படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்காக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதை முறியடிக்கும் விதமாக ‘தி சேலன்ஜ்’ என்கிற ரஷ்ய மற்றும் ஆங்கிலத்தில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு விண்வெளியில் நடக்க இருக்கிறது. இதற்காக அந்த பட நிறுவனம் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விண்வெளியில் தங்குவதற்கான பயிற்சியை படத்தின் நடிகை யூலியா பெரிசில்ட் , இயக்குநர் ஷிபென்கோ ஆகியோர் எடுத்து வருகிறார்கள். இவர்கள் கசகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர். மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் இப்பயணத்துக்கு தலைமை தாங்கவிருக்கிறார். அவர்கள் மூவரும் சோயுஸ் எம் எஸ்-19 விண்கலத்தில் 12 நாள் பயணமாக செல்ல உள்ளனர். அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க விண்வெளிப் பயிற்சிபெற்ற ஒரு டாக்டர் விண்வெளிக்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே கதை என படக்குழு அறிவித்துள்ளது. ரஷ்ய படக்குழு விண்வெளிக்கு கிளம்பும் வரை எதுவும் உறுதியில்லைதான் என்றாலும் படக்குழுவினர் வெற்றிகரமாக விண்வெளிப் பயிற்சியை ரஷ்ய விண்வெளி மையத்தில் முடித்துவிட்டார்களாம்.
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை