வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு.
இந்த திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று சி வி குமார் கூறுகிறார். படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், “இளம் வயது முதலே எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். எனது தந்தையின் அலுவலகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்ற போது வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். சினிமா துறைக்கு வந்தபோது சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது . இப்பொழுது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. கொற்றவையின் முதல் பகுதி ஒரு ஆரம்பம் மட்டும் தான். 70 சதவிகிதம் சமகாலமாகவும் 30 சதவிகிதம் வரலாற்று பின்னணியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் முழுக்க சாகசம் நிறைந்தவையாக இருக்கும்,” என்றார்.
படத்தின் கதாநாயகன் ராஜேஷ் கனகசபை கூறுகையில், “படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தே ஒரு அச்சம் கலந்த சுவாரசியம் இருந்தது. இந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது. இரண்டாம் பாகம் இதை விட பிரமாண்டமாக இருக்கும் என்றும், அதற்கு இன்னும் அதிக உழைப்பு தேவைப்படும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறேன்,” என்றார். படத்தின் கதாநாயகி சந்தனா ராஜ் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக வருகிறார். “எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக சி வி குமார் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்கள் மீது வைத்த நம்பிக்கை எங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைத்தது. இந்தப் படம் ஒரு மிக பெரிய அனுபவப் பாடமாக இருந்தது,” என்று தெரிவித்தார்.
மயில் பிலிம்ஸ் டாக்டர் கே பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. ‘கொற்றவை: தி லெகசி’ என்று பெயரிடப்பட்டுள்ள முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.