தமிழ் சினிமா மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஏன் சில வங்காளப் படங்களும் கூட அன்றைய கோடம்பாக்கத்தில் படமாகியிருக்கின்றன.
ஆனால், இன்றைய நிலை மிகவும் மோசமானது. தற்போது கோடம்பாக்கத்தின் இடத்தை தெலுங்கானா மாநிலத்தின் தலை நகரான ஹைதராபாத் மொத்தமாக எடுத்துகொண்டுபோய்விட்டது. அதுவும் ஹைதராபாத்தின் கடல் போன்ற திரைப்பட நகரம் எனக் கூறப்படும் ராமோஜி ராவ் திரைப்பட நகரம் தமிழ் சினிமாவின் மொத்த படப்பிடிப்புகளையும் கோடம்பாக்கத்திலிருந்து அள்ளிக்கொண்டு போய்விடுகிறது.
இன்றைய தேதிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’, அஜித்தின் ‘வலிமை’, ‘தனுஷ் -43’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, விஷாலின் ‘எனிமி’ உள்ளிட 14 தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடப்பதாக நடப்புத் தமிழ்பட்டத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருக்கிறது. அதற்கான காரணம், ராமோஜி ராவ் மாதிரி முழுமையான செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது. கொரோனா காலம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வராமலும் உள்ளேயிருக்கிற ஆட்கள் வெளியே போகாமலும் இருப்பதற்கான ஏற்பாட்டை பயோ பபிள் என்போம். படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தரும் இந்த வசதி ராமோஜி திரைப்பட நகரத்தில் இருக்கிறதாம். சென்னையில் பெரும்பாலான ஸ்டுடியோக்களில் இந்த வசதி கிடையாது என்பதுதான் ஹைதராபாத்தை நோக்கித் தமிழ் சினிமா படையெடுக்கக் காரணம் எனவும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருக்கிறது.