ரஜினிகாந்துக்குப் பிறகு குழந்தைகளுக்கும் பிடித்த கதாநாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் படம் முழுமையாகத் தயாராகி திரையரங்க வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
அதேபோல். ‘டான்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். அறிவியல் புனைவு திரைப்படமான ‘அயலான்’ படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையில் சன் டிவிக்கு தொடர்ந்து சில படங்களில் நடித்துக்கொடுக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வருகின்றன.
கொரோனா பேரிடர் காலத்தில் ஒரு முன்னணிக் கதாநாயகனாக கொரோனா விழிப்புணர் காணொளி, கோரோனா நிவாரண நிதி என எல்லா வகையிலும் சமூகப் பொறுப்புள்ள ஒரு கலைஞான தன்னை தக்க வைத்துள்ளார். விஜய், அஜித் ஆகிய இருவருக்கு அடுத்த நிலையில் சிவகார்த்திகேயனின் படங்கள் 125 கோடிவரை வசூல் செய்து வருகின்றன. அதனால், இவரது படங்களை ஓடிடியில் விற்கமுடியாத நிலை உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் படங்கள் கொரோனா இரண்டாம் அலை முடிந்து திரையரங்குகள் திறப்புக்காக காத்திருக்கின்றன.
இதற்கிடையில் தன்னுடைய சமூக வலைதளத்தில் அவசியம் இருந்தால் மட்டுமே பதிவிடும் சிவகார்த்திகேயன் இன்று ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ என்ற தலைப்பீட்டு, தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் காய்கறிகள், பழச்செடிகள், பூச்செடிகள், கொடிகள் ஆகியவற்றை பசுமை இல்லம் அமைத்து பயிரிட்டிருப்பதை புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார். அதை இந்த ஊரடங்கு காலத்தில் தனது மகளுடன் சென்று பார்ப்பது போல 4 புகைப்படங்கள் வெளிட்டிருக்க.. அதை அவருடைய ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டிவருகிறார்கள்.