கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் பேச்சு வார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அதை அர்ஜுன் மறுத்தார். தற்போது அதை அதிகாரபூர்வமாக உறுதி செய்திருக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் ‘சர்க்காரு வாரி பாட்டா’ என்ற படத்தில்தான் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். கோரோனா இரண்டாம் அலை முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் ஒப்பந்தம் ஆனதுமே ரவிதேஜா கதாநாயகனாக நடிக்கும் ‘கில்லாடி’ படத்தில் அர்ஜுனை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தமிழில் முதன் முதலில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் வில்லனாக நடித்தார் அர்ஜுன். அதன்பிறகு விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டினார். ஹீரோ படத்தின் சிவகார்த்திகேயனின் ஆசிரியராக நடித்தார் அர்ஜுன். அதன்பிறகு மோகன்லாலின் நண்பனாக ‘மரக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் நடித்து முடித்தார்.
அத்துடன் ‘வீரண்ணு’ என்ற மலையாளப் படத்தில் களரி ஆசானாக நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் ஜான் பால் ராஜன் இயக்கத்தில் ‘ஃபிரெண்ட்ஸ்ஷிப்’ என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லோஸ்லியா ஆகியோருடன் நடித்துவந்த படமும் முடிந்துவிட்டது.
																						
     
     
    