வெகுஜன எழுத்துலகில் 90-களில் பிரபமான எழுத்தாளராக வலம் வந்தவர் இந்துமதி.
இவர் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களுக்கு கதை எழுதுவதில் பிரபலமானார். இவர் சமீபத்தில் தன்னுடைய நண்பரும் பத்திரிகைத்துறை நண்பருமான மாலனிடம் ‘ரஜினி தனது வயதுக்கேற்ற கதைகளைக் கேட்டு வருவதாக’ கூறி தனது சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ரஜினியின் இந்த முடிவு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய பதிவு வருமாறு:
இன்றைய பொழுது நற்பொழுதாக விடிந்திருக்கிறது. நேற்றிரவு நானும் மாலனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.எங்கள் எழுத்தாள நண்பரிடம் ரஜினி காந்த் தன் வயதிற்கேற்ற மாதிரி கதை கேட்டிருக்கிறாறாம். இதன் நம்பகத் தன்மை பற்றி நாங்கள் அறியோம். நிறைய கதைகளைப் பற்றி விவாதித்தோம். சாவியின் விசிறி வாழை கூட அலசினோம். எங்கள் இருவர் மனதிலும் உடனே பளிச்சிட்டது 'பவர் பாண்டி'. அற்புதமான படம். தியேட்டரிலேயே இரண்டு முறை பார்த்தேன். மிகவும் subtle ஆன படம். ரஜினி எப்போதோ விழித்துக் கொண்டிருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் பார்முலா படங்களைத் தவிர்த்திருக்கலாம். அமிதாப் பச்சன் இறங்கிய மாதிரி பிளாக் போன்ற படங்களில் இறங்கியிருக்கலாம்.
அமிதாபை விட இளையவரான அமீர் கான் ' தாரே ஜமீன் பர், சக்தே இண்டியா, லகான் போன்ற உயிரோட்டமான, மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்த, ஆயுளுக்கும் மறக்கமுடியாத படங்களைக் கொடுத்தார். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான சிவாஜி கணேசனைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவருட் செல்வர், திருவிளையாடல், படிக்காத மேதை, முதல் மரியாதை என்று விதம் விதமான கதா பாத்திரங்களை ஏற்று அட்டகாசப் படுத்தினார்.
இவற்றையெல்லாம் ரஜினி அறியாதவரல்ல. அவருக்குத் தெரியாததல்ல. நாம் சொல்ல வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அத்துறைக்கு வெளியில் இருப்பவர்களாகிய நாம் இத்தனை சிந்திக்கிற போது அவர் சிந்தித்திருக்க மாட்டாரா என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும் ஒரு ஆதங்கம் தான். நல்ல திறமையான மனிதர். பல dimention களில் தன் திறமையை வெளிப்படுத்த வல்லவர்.நிரூபிக்கக் கூடியவர் இன்னும் ஏன் பார்முலா படங்களையே செய்து கொண்டிருக்கிறார்.? ரெண்டு ஃபைட். ரெண்டு டூயட் ஒரு ஸோலோ. போதுமா..? நிறைவடைந்து விட முடியுமா..? பணம் வேண்டுமானாலும் கிடைக்கலாம்..ஆனால் சிவாஜி மாதிரி, அமீர்கான் மாதிரி, அமிதாப் மாதிரி என்றென்றும் நிற்க வேண்டாமா..?
இப்போது, இந்த எழுபது வயதிலும் செய்யாவிட்டால் எப்போது செய்வீர்கள் ரஜினி காந்த் அவர்களே?
இப்படிக்கு
இந்துமதி