சமூக வலைதளங்களில் இன்று மாலை முதலே புதிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. தற்போது தளபதி விஜய் சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கிவரும் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. எப்போதுமே விஜய் தன்னுடைய ஒரு படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்த படத்தை முடிவு செய்துவிடுவார். அந்தவகையில் பீஸ்ட் படத்துக்கு அடுத்து, விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பல தகவல் தற்போது கசிந்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நேரடித் தெலுங்குப்படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இயக்குநர் மகிழ்திருமேனியின் கதையைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் விஜய். இப்போது உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மகிழ்திருமேனி, அடுத்து விஜய் படம்தான், அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் தயார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இவையொருபுறம் இருக்க, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ரஜினிக்கு சொன்ன கதையை விஜய்யை வைத்து இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இவற்றைவிட ஹாட்டான செய்தி தற்போது வெற்றிமாறன் வட்டாரத்தில் பரபரக்கிறது. அதாவது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் வெளியான ஷூஸ் ஆஃப் த டெட் (Shoes Of the dead) என்கிற நாவலைத் தழுவி வெற்றிமாறன் எழுதியுள்ள திரைக்கதையில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கோட்டா நீலிமா என்கிற தெலுங்கு எழுத்தாளர் எழுதியுள்ள இந்நாவலைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை 2016-ல் வெற்றிமாறன் உரிமை பெற்றுள்ளார் என்று பரபரக்கிறது அந்த தகவல். தவிர, அந்த நாவலின் தமிழாக்கத்தை விஜய்யிடம் கொடுத்ததாகவும் அதைப் படித்துவிட்டு விஜய் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.
கார்ப்பரேட் மாஃபியாக்களால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதை அடிப்படையாகக் கொண்ட நாவல் அது. தற்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களால் எவ்வளவு மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை இந்நாவலின் கதை சொல்கிறது என்கிறார்கள். ஒரேநேரத்தில் அரசியல், சினிமா இரண்டிலும் அதிரடி செய்ய தளபதி ரசிகர்களுக்கு அதிக ஹேஷ்டேக் கிடைத்துவிடும்போல் இருக்கிறது.