கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் உட்பட, கர்ப்பிணிகள் சிலர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதித்த பெண்ணுக்கு சென்னையில் மருத்துவர்கள் சுகப் பிரசவம் செய்துள்ளனர். பச்சிளம் குழந்தைக்கு கொரானா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த 26 வயது கர்ப்பிணி பெண் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்கு முன், ரத்த பரிசோதனை செய்தபோது கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. எனவே, இவருக்கு பிரசவம் பார்ப்பது சிக்கலாக இருந்தது. சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, மகப்பேறு மருத்துவர் கவிதா கௌதம் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, டாக்டர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு அவருக்கு சுகப்பிரசவம் செய்தனர். இந்த பிரசவத்தில் பிறந்த தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.
இது குறித்து பேசிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கவிதா கவுதம், "ஏற்கனவே சிசேரியன் முறையில் பிரசவித்துள்ள இவருக்கு, இப்போது சுகப்பிரசவம் ஆகியுள்ளது. இந்த பிரசவம் தற்போது ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனவே, கர்ப்பிணிகள் யாரும் தொற்று வந்தாலும் பயப்பட வேண்டாம். தற்போது, பிரசவித்துள்ள பெண் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தவிர, பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று வராமல் தவிர்க்க, தாய்க்குப் பாலு◌ாட்டுதல் குறித்த சிறப்பு முறைகளும் சொல்லித் தரப்பட்டது. மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்படி, 2 மாஸ்க் அணிந்து கொண்டு பால் புகட்டினார். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார். மதுரை டாக்டர் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை கார்த்திகா மற்றும் டெல்லியில் வசித்த பெண் டாக்டர்கள் உட்பட சில கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில், இந்த சுகப்பிரசவம் நம்பிக்கையை உண்டாக்கி உள்ளது.