இந்தியாவில் கொரோனாவின் தொற்றுப் பரவல் சற்றுக் குறைந்து வருவதாக எண்ணப்படும் வேளையில், வங்கக் கடலில் உருவான யாஸ் புயலின் நாளை மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியபோது 'யாஸ்' என அதற்குப் பபெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து தற்போது தீவிர புயலாக மாறி, நகரத்தொடங்கியுள்ளது.
வடமேற்கு திசையில் நகரும் இப்புயல், நாளை ஒடிசா மற்றும் மேற்குவங்கம் பகுதிகளினூடாக அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது. இந்திய வானிலை துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம், இப்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் ஆரம்ப அறிகுறியாக தற்போது இப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றார்கள். மக்களின் பாதுகாப்புப் பணிகளுக்காக, இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களை மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளன. இது தவிரவும், 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும், கிழக்குக்கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்களும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.