இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உச்ச நிலையை அடைந்துவந்தன. இதனையடுத்து கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளும், ஊரடங்குகளும் பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு அமுலில் உள்ளன. இதனால் கொரோனா பரவல் சங்கிலி முறியடிக்கப்பட்டு நாளந்த பாதிப்புக்களின் எண்ணிக்கை வீழ்ச்சிஅடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் நேற்று முந்தினம் நாளந்த பாதிப்புக்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 ஆக இருந்த நிலையில் நேற்று 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு தொற்று உறுதியானது. இது மேலும் சரிந்து இன்று 1 லட்சமாக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதன் தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 09 ஆயிரத்து 975 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,49,186 ஆகவும்; மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக உயர்வடைந்து உள்ளது.
நாட்டில் இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்து 482 ஆக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை தமிழகத்தில் இன்று முதல் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் 1 வாரத்திற்கு அமலாக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அவசர பயணங்களுக்கு இ-பாஸ் அவசியமாக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அங்கு கட்டுப்பாட்டுக்குள் பாதிப்பு நிலவரங்கள் கொண்டுவரப்பட்டமையால் ஒன்றரை மாத ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் சுழற்சி முறையில் காலை10 மணி முதல் இரவு 8 மணிவரை சந்தை மற்றும் வணிகவளாகங்களில் உள்ள கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் 50 சதவிகித பயணிகளுடன் மெர்டோ ரெயில் சேவை இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மும்பை மராட்டியத்திலும் இன்று முதல் புதிய தளர்வுகள் நடைமுறையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு உள்ளூர் பேருந்து சேவைகள் இன்று முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது, பேருந்தின் மொத்த இருக்கைகளின் பாதியளவு எண்ணிக்கையிலே பயணிகள் செல்லமுடியும் எனவும் மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.