நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கும்
தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று கூறி, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி, குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மக்கள் அனைவரும் தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கூறி, இதை பிரபலப்படுத்த நட்சத்திரங்களை தூதர்களாக நியமித்தார்.
இந்நிலையில், ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஸ்வச் பாரத் 2.0 திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தை (Swachh Bharat Mission-Urban 2.0) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். குப்பைகளில்லா நகரங்களை உருவாக்குதல், கழிவுநீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சிக்கும் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.