இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதேபோல் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் சட்டரீதியான பாதுகாப்பை சீரம் நிறுவனமும் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்துவரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் குறிப்பிட்ட தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை மத்திய அரசு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வகையில் இந்தியாவிற்கு வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகியவை விரைவில் வரவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அம் மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும் தனது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு சட்டரீதியான பாதுகாப்பைக் கோரியதாக கூறப்படுகிறது. மேலும் இவ்விடயத்தில் காப்பீடு கோரும் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்குமெனில்; இந்தியாவிலும் அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும் அதே பாதுகாப்பைப் பெற வேண்டும் என சீரம் மேற்கோள்காட்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.