சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மாக்ரோனை எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த நபருக்கு வியாழக்கிழமை நீதிமன்றம் முதலில் 18 மாத சிறைத் தண்டனை அளித்த பின் அதனை 14 மாதங்கள் குறைத்து 4 மாத சிறைத் தண்டனையாக அறிவித்துள்ளது.
செவ்வாய்க் கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் மாக்ரோனை கன்னத்தில் அறைந்த நபர் 28 வயதாகும் டேமியன் தாரெல் என்றும் அவர் ஒரு இடைக்கால வரலாற்று ஆசிரியர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சம்பவத்தின் பின் உடனே கைது செய்யப் பட்ட டேமியனின் நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது வேண்டுமென்றே நிகழ்த்தப் பட்ட வன்முறை என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது வழக்கு பிரான்ஸின் தெற்கு நகரமான வாலென்ஸில் உள்ள நீதிமன்றத்தில் இடம்பெற்றதுடன், தீர்ப்பின் அடிப்படையில் முதலில் இரவுப் பொழுதை டேமியன் சிறையில் கழிக்க நேரிடும் என்றும் தெரிய வருகின்றது. இக்குற்றச் செயலுக்காக டேமியன் கிட்டத்தட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையும், €45,000 யூரோ தண்டப் பணமும் செலுத்த வேண்டிய அளவு தண்டனை பெற வாய்ப்பிருந்தது. ஆயினும் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் இரு வருடங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனைகளை காவலில் வைக்காத தண்டனையாக மாற்ற முடியும்.
நீதிமன்ற விசாரணையின் போது அரச எதிர்ப்பு அமைப்பான மஞ்சல் உடுப்பு (Yellow vest movement) இற்கு ஆதரவாக பேசிய டேமியன், மாக்ரோன் டிரோம் பகுதி கூட்டத்துக்கு வரும் போது, அவர் மீது முட்டை அல்லது அல்லது கேக் இனை எறியக் கூடத் தனது இரு நண்பர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். மேலும் மாக்ரோன் எமது நாட்டின் வீழ்ச்சியை பிரதிபலிக்கின்றார் என்றும் டேமியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டேமியன் வேலை இல்லாதவர் என்றும் பண உதவிகளால் வாழ்பவர் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம், தேர்தல் நண்மைக்காகத் தன்னை மாக்ரோன் அணுகி வாழ்த்த வந்தது தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால் தான் அவரின் கன்னத்தில் அறைந்தேன் என்றும் டேமியன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் பதியப் பட்ட வீடியோவில், சிரித்த முகத்துடன் அதிபர் மாக்ரோன் டேமியன் தாரெல் நின்று கொண்டிருந்த கூட்டத்தை நெருங்கி சென்றதும் தெரிவது குறிப்பிடத்தக்கது.