உலகை சமீப காலமாக அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய வீரியம்மிக்க திரிபான ஒமிக்ரோன், தென்னாப்பிரிக்காவில் முதலில் இனம் காணப் பட்ட காரணத்தினால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையான விமானப் போக்குவரத்துத் தடைகளை உலக நாடுகள் விதிப்பது அபத்தமானது என உலக சுகாதாரத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவுக்கான WHO இன் பிராந்திய இயக்குனரான மட்ஷிடிசோ மொயேட்டி கருத்துத் தெரிவுக்கும் போது, முழுமையான பயணத் தடைகளுக்குப் பதிலாக விஞ்ஞான மற்றும் சர்வதேச சுகாதார ஒழுங்கமைவுகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளை அதிகம் உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்றுள்ளார். இதற்கு மாறாக முழுமையான பயணத் தடைகள் தொடர்ந்து நீடிக்குமானால், அது தென்னாப்பிரிக்க நாட்டு மக்களது வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் சுமார் 190 நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட சர்வதேச சுகாதார ஒழுங்கமைவுகளுக்கு ஏற்ற விஞ்ஞான ரீதியான முழுமையான அணுகுமுறையே இப்போதிருக்கும் முக்கிய தேவையாகும் என்றும் கூறிய மொயேட்டி, தனது நாட்டில் ஆபத்தான ஒமிக்ரோன் திரிபு அறியப் பட்டதும் தாமதிக்காது அதனை உலக சுகாதாரத் தாபனத்துக்கு உலக சுகாதார நெறிமுறைகளின் கீழ் தெரியப் படுத்திய தென்னாப்பிரிக்க அரசின் செயல் பாராட்டத் தக்கது என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் அமுலாகி இருக்கும் சர்வதேச நாடுகளது முழுமையான பயணத் தடையானது முற்றிலும் நீதிக்கு எதிரானது என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா விசனம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத் தடையானது இப்போது தான் கோவிட் பெரும் தொற்றில் இருந்து மெல்ல மீள எத்தனித்திருக்கும் பாதிக்கப் பட்ட நாடுகளது பொருளாதாரத்தை மீண்டும் பாதாளத்தில் தள்ளக் கூடியது என்றும் இந்நடவடிக்கையானது விஞ்ஞான ரீதியிலானது அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.