free website hit counter

4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பாவில் மிக வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று

உலகின் பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது சற்று வேகமாகப் பரவி வரும் Monkeypox என்ற குரங்கு அம்மை வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதாரத் தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த வைரஸ் தொற்று ஐரோப்பாவுக்குப் பரவியிருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது. இந்தத் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மை போன்ற தொற்றுக்களை விட அதிகளவு கொப்பளங்கள் உடல் முழுதும் ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

முக்கியமாக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களது சமூகத்தினர் ஒன்று கூடும் இடமொன்றில் இத்தொற்று பரவுவது குறித்து WHO விசாரணை நடத்தியதை அடுத்து அந்த இடம் மூடப் பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை நூற்றுக் கணக்கான தொற்றுக்கள் இனம் காணப் பட்டுள்ளன. காய்ச்சல், தசை நோவு மற்றும் கைகளிலும், முகத்திலும் தோன்றும் கொப்பளங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது உயிரை வாங்கும் ஆட்கொள்ளி நோய் இல்லை என்றாலும் உலக நாடுகள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.


மரியுபோலை முற்றாகக் கைப்பற்றிய ரஷ்யா: அதிகரித்துள்ள போர்க் கைதிகள் குறித்த கரிசனை

கிட்டத்தட்ட 3 மாதங்களாக இடம்பெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் இதுவரை 20 000 பொது மக்கள் வரை இறந்துள்ளதாகக் கணிப்பிடப் பட்டுள்ள நிலையில், சமீபத்தில் மரியுபோல் நகரை முற்றாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இது ரஷ்ய தரப்புக்கு முக்கியமான ஒரு வெற்றியாகக் கருதப் பட்டுள்ளது.

மரியுபோலின் இரும்பு ஆலை ஒன்றில் இருந்து ஆயிரக் கணக்கான போர்க் கைதிகளை ரஷ்யா கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது யுத்தக் குற்ற விசாரணையைத் தொடுக்க இருப்பதால் இக்கைதிகள் குறித்த சர்வதேசத்தின் கரிசனை அதிகரித்துள்ளது. இக்கைதிகளில் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ரஷ்யாவின் முற்றுகையை எதிர்த்து உக்ரைன் நடத்தும் போரில் உக்ரைனுக்கு உதவும் விதத்தில் $40 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மேற்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த புது நிதி ஒதுக்கீட்டில் $20 பில்லியன் டாலர் நவீன ஆயுதங்களை உக்ரைன் படையினருக்கு வழங்கவும், $8 பில்லியன் டாலர் பொருளாதார மீட்சிக்கும், $5 பில்லியன் டாலர் உணவுப் பற்றாக்குறையைப் போக்கவும், $1 பில்லியன் டாலருக்கும் சற்று அதிகமான தொகை அகதிகளுக்கு உதவுவதற்கும் என வழங்கப் படுகின்றது.

2 ஆம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் இடம்பெற்று வரும் மிகப் பெரும் முற்றுகை நிலையாக உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போர் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

 


அமெரிக்காவின் வடக்கு மிச்சிக்கனில் டோர்னிடோ புயலுக்கு இருவர் பலி

வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின் டெட்ரொயிட் இற்கு வடமேற்கே 230 மைல் தொலைவில் கிட்டத்தட்ட 4200 பொது மக்கள் வகிக்கும் கேய்லோர்ட் என்ற சிறிய நகரை சற்று வலுவான அதே நேரம் அரிதான டோர்னிடோ புயல் தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். இதில் 70 வயதாகும் முதியவர் ஒருவரும் அடங்குகின்றார். 40 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

டோர்னிடோ தாக்கிய பகுதிகளில் 95% வீதம் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் டோர்னிடோ புயல் காரணமாக பலத்த பொருட் சேதமும் சிலவேளைகளில் உயிர்ச் சேதமும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கனடாவிலும் ஒண்டாரியோ மற்றும் கியூபெக் போன்ற மாகாணங்களை அண்மையில் தாக்கிய மோசமான புயல் காற்றுக்குக் கிட்டத்தட்ட 900 000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டிருப்பதாகவும், புயலில் சிக்கி 4 பொது மக்கள் பலியாகி இருப்பதாகவும் கூட அறிவிக்கப் பட்டுள்ளது.

 

முதல் ஆசியப் பயணத்தில் தென்கொரியாவின் புதிய அதிபரைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் பைடென்

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் முதல் நாடாக வெள்ளிக்கிழமை தென்கொரியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் புதிய அதிபர் யூன் சுக் இயோலை சியோலில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீப காலமாக அதிகரித்து வரும் வடகொரிய ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அணுவாயுதத் திட்டங்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்வது குறித்தும் இதன் போது இருவரும் பேசிக் கொண்டனர்.

ஜோ பைடென் அதிபராகப் பொறுப்பேற்ற பின் மேற்கொள்ளும் முதல் ஆசியப் பயணம் இதுவாகும். ஜப்பானில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் அதிபர் பைடென் பங்கேற்கவுள்ளார். இதற்கு முன் ஜப்பான் பிரதமரையும் இவர் சந்திப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


நேட்டோவில் சேர விண்ணப்பித்த பின்லாந்து! : எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா நிறுத்தம்

மேற்குலக நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் இணைய பின்லாந்து நாடு விண்ணப்பித்ததை அடுத்து அந்நாட்டுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா சடுதியாக நிறுத்தியுள்ளது. ஏற்கனவே உக்ரைன் நேட்டோவில் சேரத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது ரஷ்யா அதன் மீது படையெடுக்க முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் பிராந்திய பாதுகாப்பு அச்சம் காரணமாகவே பின்லாந்து அரசு நேட்டோ அமைப்பில் சேர விண்ணப்பித்ததாகவும் தெரிய வருகின்றது.

இந்த அறிவிப்பு வெளி வந்து 2 நாட்களுக்குள் பின்லாந்துக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula