சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா வழங்கி வந்த இராணுவத் தளவாட உதவிகளை அமெரிக்கா மிகவும் குறைத்துக் கொண்டது தமக்குப் பாதிப்பில்லை என்றும் இது தமது பாதுகாப்பு வளங்களைத் தாக்காது என்றும் சவுதி கூட்டணி நாடுகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.
இதே நாள் தான் யேமெனி கிளர்ச்சியாளர்கள் செலுத்திய மிக அதிகபட்ச 17 டிரோன் விமானங்களை சவுதி இடைமறித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை அமெரிக்கா விடுத்த செய்தியில், மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் துருப்புக்களையும், வான் பாதுகாப்பு யூனிட்டுக்களையும் மிகப் பெரும் அளவில் குறைத்திருப்பதாகவும், இதில் சவுதி அரேபியாவில் இருந்து செயற்படும் THAAD எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் இது சவுதியின் வான் பாதுகாப்பைப் பாதிக்காது என கூட்டணி நாடுகளின் பேச்சாளர் துர்க்கி அல் மலிக்கி பத்திரிகைகளுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய அதிபர் ஜோ பைடென் சவுதியின் முக்கிய எதிரியான ஈரானுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை குறைப்பதற்காக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. 2015 ஆமாண்டு முதல் யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன.
6 வருடம் நீடிக்கும் இப்போரில் ஐ.நா மற்றும் அமெரிக்காவின் இதுவரையிலான சமாதான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. யேமென் சிவில் யுத்தம் காரணமாக அங்கு மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.