ஆப்கானில் தாலிபான் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றி 100 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், பெரும் உணவுப் பஞ்சத்தில் பொது மக்கள் சிக்கி அங்கு மிகப் பெரும் மனித அவலம் ஏற்பட்டு வரும் நிலையிலும், முதன்முறையாக அமெரிக்கா தாலிபான்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, வேலை வாய்ப்பில் கடும் வீழ்ச்சி போன்றவற்றாலும், உலக நாடுகளது பொருளாதாரத் தடைகள் மற்றும் சொத்துக்கள் முடக்கம் காரணமாகவும் ஏற்பட்டிருக்கும் கடும் உணவுப் பற்றாக்குறை ஆப்கானிஸ்தான் மக்களைத் தற்போது கோர பஞ்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது. இதனால் உலக நாடுகளது நிதி மற்றும் பொருள் உதவியை எதிர்பார்ப்பதாக தாலிபான் அரசு வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த வாரம் கத்தாரில் தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதாகவும், இதன் போது அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய தேச தீவிரவாதத்துக்கு எதிரான போர் மட்டுமன்றி ஆப்கானில் தற்போது நிலவி வரும் மனிதாபிமான பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாகவும் முக்கியமாகப் பேசப் படும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் தாலிபன் பிரதிநிதிகளுடன் அமெரிக்க விசேட பிரதிநிதி டொம் வெஸ்ட் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா ஆப்கானுக்கு நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்க, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு, சிறுபான்மையினத்தவரின் உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம பங்களிப்பு போன்ற நிபந்தனைகளை தாலிபன்களுக்கு விதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
ஆப்கானின் தாலிபான்கள் அரசின் வெளியுறவு அமைச்சரான ஆமிர் கான் முட்டாக்கி இனை சர்வதேச சமூகம் இன்னமும் அங்கீகரிக்கவிலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தரப்பில் ஆப்கானுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி டொம் வெஸ்ட் என்பவர் திட்டமிடப் பட்டுள்ள 2 வாரங்களுக்கான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.