கிழக்கு அமெரிக்கா மிக மோசமான பனிப்புயலை சமீப நாட்களாக எதிர்கொள்வதால் பல மாகாணங்களில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப் பட்டுள்ளது.
முக்கியமாக தலைநகர் வாஷிங்டன் மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாமல் அதிகளவு பனிப்பொழிவு நிகழ்ந்து வருகின்றது.
கடுமையான பனிப்பொழிவு ஏற்பட சில மணித்தியாலங்கள் முன்பாகவே 5 மாநிலங்களில் அவசர நிலை பிறப்பிக்கப் பட்டது. அமெரிக்காவின் சில பகுதிகள் வரலாறு காணாத பனிப்பொழிவை எதிர்கொள்ளும் என்றும் கடலோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப் பட்டது. இதுவரை 6000 இற்கும் அதிகமான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளது. பாஸ்டன் பகுதியில் 2 அடி உயரத்துக்கு பனி மூடும் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் ஏற்கனவே நியூயோர்க்கின் சில பகுதிகளில் 2 அடி உயரத்துக்கு பனி மூடியுள்ளது.
மேலும் இந்த தீவிர பனிப்புயல் காரணமாக 'பாம்போஜெனிசிஸ்' என்ற வகை சைக்கிளோன் சூறாவளி அமெரிக்காவின் பல இடங்களைத் தாக்கும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால் பாஸ்டன் தேசிய வானிலை சேவை அவசர காரணங்களுக்காக மட்டுமே மக்களைப் பயணம் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியூயோர்க், நியூஜேர்சி, மேரிலாண்ட், ரோட் ஐலாண்ட், விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.