சமீப வாரங்களாக உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா இலட்சக் கணக்கான துருப்புக்களை குவித்து வந்ததால் போர்ப் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பதற்றத்தைத் தவிர்க்கவும், இராஜதந்திர அடிப்படையிலான தீர்வுகளைக் காணவும், அமெரிக்க அதிபர் பைடென் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இன்று செவ்வாய்க் கிழமை நடைபெறும் தொலைபேசி உரையாடலில் கட்டாயம் பேச வேண்டும் என எயூராசியா நிலையத்தின் பிரதி அதிபர் ஏர்ல் றாஸ்முஸ்ஸென் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விரு தலைவர்களும் ஜூன் மாதம் ஜெனீவாவில் நேரடியாகச் சந்தித்ததன் பின்னரான முக்கிய பேச்சுவார்த்தை இதுவென்று கூறப்படுகின்றது. மறுபுறம் பீஜிங்கில் 2022 ஆமாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா அரச முறையில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிபர் ஜோ பைடென் தலைமையிலான நிர்வாகம் தீர்மானித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாண இனப் படுகொலைகள், மற்றும் மனிதாபிமான குற்றங்களுக்கு எதிரான அடையாளப் போராட்டமாக இப் புறக்கணிப்பை மேற்கொள்வது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி இது குறித்துக் கூறும் போது, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவென அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக் குழுவை அனுப்பப் போவதில்லை என்றும், ஆனால் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்பார்கள் என்றும் இந்நடைமுறை பாராஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.