சமீபத்தில் உலகை அச்சுறுத்தும் விதத்தில் வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைப் பரிசோதனைகளை நிகழ்த்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்குமாறு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்கா அழுத்தம் விதித்துள்ளது.
இத்தகவலை புதன்கிழமை ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரான லிண்டா தோமஸ் கிறீன்ஃபீல்டு உறுதிப் படுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கிறீன்ஃபீல்டு வெளியிட்ட தகவலில், 2021 ஆமாண்டு செப்டம்பர் முதற்கொண்டு இதுவரை வடகொரியா 6 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்திருப்பதாகவும், இந்த சோதனைகள் அனைத்துமே ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானங்களுக்கு எதிரானவை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த ஏவுகணை சோதனைகளை அடுத்து அமெரிக்கா வடகொரியா மீது தனிப்பட்ட ரீதியில் சில பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் 6 வடகொரியர்கள், மற்றும் ஒரு ரஷ்ய நிறுவனம் ஆகியவற்றை கருப்புப் பட்டியலிலும் சேர்த்துள்ளது. 2006 ஆமாண்டு முதற்கொண்டு வடகொரியாவின் ஏவுகணை சோதனை இலக்குகளுக்காக ஐ.நா தடைகளை விதித்து வருகின்றது. ஆனாலும் வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதில் ராஜ தந்திர ரீதியில், அமெரிக்க அதிபர் பைடெனின் நிர்வாகம் தோல்வி கண்டு வருவதாகவும் கணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.