உலக நாடுகளைத் தற்போது கோவிட்-19 பெரும் தொற்றின் டெல்டா திரிபு 3 ஆவது அலை மோசமாகத் தாக்கி வருகின்றது.
உச்சக் கட்டமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1000 கோவிட் மரணங்களும், மணித்தியாலத்துக்கு 42 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
மிகத் தீவிரமாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிகளவு மக்களுக்கு செலுத்தப் படாத இடங்களில் டெல்டா திரிபின் மோசமான பாதிப்பினால் தான் மரணங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளன. கோடைக் காலத்துக்கு முன்பாக அமெரிக்காவில் டெல்டா திரிபுக்கு முன் தினசரி சராசரி கோவிட் இழப்புக்கள் 769 இற்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது.
தற்போது அதிபர் ஜோ பைடென் தலைமையிலான அரச நிர்வாகம் செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவில், விமானங்கள், ரயில்கள், பேருந்துக்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என உறுதிப் படுத்தியுள்ளது. உலகளவில் கோவிட் பெரும் தொற்றால் மிக அதிகளவு சிறுவர்கள் பாதிக்கப் பட்டதும், உயிரிழந்த வீதமும் அமெரிக்காவில் தான் அதிகமாகும். இன்றைய நிலவரத்தில் அமெரிக்காவில் சுமார் 1834 சிறுவர்கள் கோவிட் பாதிப்பால் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதேவேளை பிரிட்டனைப் போன்றே அமெரிக்காவிலும், கோவிட் பெரும் தொற்றின் டெல்டா மாறுபாட்டை சமாளிக்க பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பு மருந்தை மக்களுக்குப் போட அமெரிக்க மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.