அமெரிக்க இராணுவம் மற்றும் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களை தனது தளத்தில் கசிய விட்டதற்காக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தாபகர் ஜூலியன் அசாஞ்சே பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறி இருந்தார்.
இவர் மீதான பாலியல் குற்றச் சாட்டுக்களை சுவீடன் நீதிமன்றம் விசாரித்தது. இதன்போது பன்னாட்டு பிடியாணை இவர் மீது பிறப்பிக்கப் பட்டது.
ஆனால் பாலியல் குற்றச்சாட்டு விக்கிலீக்ஸ் கசிவுகளால் பாதிக்கப் பட்டவர்களால் புனையப் பட்ட வழக்கு என்று அசாஞ்சே எதிர் வாதம் செய்தார். 2010 டிசம்பர் 7 ஆம் திகதி இலண்டன் போலிசில் இவர் சரணடைந்தார். இலண்டன் இவருக்கு புகலிடம் மறுத்ததால் இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். 2017 டிசம்பர் 12 முதல் எக்குவடோர் குடியுரிமை வழங்கியது. ஆனால் தூதரகத்துக்கு உள்ளே வைத்து 2019 ஏப்பிரல் 11 ஆம் திகதி அசாஞ்சே மீண்டும் கைது செய்யப் பட்டார்.
இதன் பின் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சமீபத்தில் இவரை நாடு கடத்த தடை விதித்து பிரிட்டன் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராகவும், இராணுவ இரகசியங்களைக் கசிய விட்டமைக்கான விசாரணைக்காகவும் அமெரிக்க அரசு புதன்கிழமை பிரிட்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இரு நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின் பிரிட்டன் நீதிபதி வனெஸ்ஸா பரைட்செர் தனது தீர்ப்பில் அசாஞ்சேவை நாடு கடத்துவது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு நிகரான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க அரசு பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு எதிரான மனுத்தாக்கல் செய்துள்ளது. 2010 இல் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்ட 500 000 ஆவணங்களில், ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவ முற்றுகை தொடர்பான ரகசியங்கள் அடங்கியிருந்தன. இதனால் சுமார் 18 வித முறைப்பாடுகளை அசாஞ்சே அமெரிக்க அரசின் மூலம் எதிர்கொள்கின்றார். இவர் அமெரிக்காவில் தண்டிக்கப் பட்டால் குறைந்த பட்சம் சுமார் 175 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப் படுகின்றது.