ஆப்கானில் நாளுக்கு நாள் மனிதாபிமான நிலமைகள் படு மோசமடைந்து வரும் நிலையில், ஆப்கான் மக்களின் உறுதியான வருங்காலத்துக்காக உலக நாடுகள் இணைந்து விரைவாகப் பணியாற்ற வேண்டும் என புதன்கிழமை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் ஈரானால் ஒழுங்கு செய்யப் பட்ட பிராந்திய மாநாடு ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெஹ்ரானில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஷ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்டான் ஆகிய நாடுகளது வெளியுறவு அமைச்சர்கள் நேரடியாகவும், ரஷ்ய, சீன வெளியுறவு அமைச்சர்கள் காணொளி வாயிலாகவும் இணைந்து கொண்டிருந்தனர். இந்த மாநாட்டில், கடுமையான தடைகளுக்கு மத்தியில், தலிபான்களுடனான கூட்டுறவுடன் ஆப்கானில் மிகப் பெரும் மனிதாபிமான உதவி ஆப்பரேஷனை ஐ.நா மேற்கொண்டு வருவதாகவும் அந்தோனியோ கட்டரஸ் தெரிவித்தார்.
மறுபுறம் ஆப்கானின் தற்போதைய நிலமை குறித்து இந்தியா மிக அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாக மூத்த பெண்டகன் அதிகாரி ஒருவர் அமெரிக்க சட்ட வல்லுனர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தியா முக்கியமாக ஆப்கானில் நிலவில் வரும் ஸ்திரத் தன்மை அற்ற சூழல் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறித்தே அதிகளவில் கவனம் செலுத்துவதாகத் தெரிய வருகின்றது. இது தொடர்பான பெண்டகன் அதிகாரியின் கூற்றில் ஆப்கான் விவகாரத்தைக் கையாள்வதில், அமெரிக்காவுடன் இணைந்து முக்கியமாக புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிய வருகின்றது.
வெறுமனே தீவிரவாத அச்சுறுத்தல் மாத்திரமன்றி இந்து சமுத்திர மற்றும் இந்தோ பசுபிக் வலயங்களிலும், மத்திய கிழக்கிலும் பிராந்திய பாதுகாப்பினை சமப்படுத்துவதும் இந்தியாவின் நோக்கமாக உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.