ஆப்கானின் ஹீரத் பகுதியைச் சேர்ந்த தலைமை போலிஸ் அதிகாரியான ஹஜி முல்லா அச்சாக்ஷாய் என்பவரை தலிபான்கள் கண்ணைக் கட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
இச்சம்பவத்தின் போது தலிபான்களிடம் குறித்த போலிஸ் அதிகாரி சரணடைந்திருந்ததாகத் தெரிய வருகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானின் அரச அதிகாரிகள், பெண்கள் என அனைவரும் தமது பணிக்குத் திரும்பலாம் என்றும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப் படுவதாகவும் தலிபான்கள் அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை மீறிய கவனத்தை ஈர்த்த செயலாக இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது. இதேவேளை தலிபான்களின் ஆட்சி அச்சுறுத்தலுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேற பெருமளவிலான மக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு வரும் நிலையில், எஞ்சியிருக்கும் தனது குடிமக்கள் காபூல் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது பாதுகாப்பு அற்றது என்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானில் சிக்கித் தவிக்கும் சுமார் 250 இந்தியர்களை மீள அழைத்து வர இந்திய அரசின் விமானப் படை சிறப்பு விமானம் காபூல் நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த சுமார் 150 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை தலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தலிபான்கள் இதனை அதிகாரப் பூர்வமாக இன்னமும் உறுதி செய்யவில்லை.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தும் விடயத்தில் நாம் முக்கிய பங்கு வகிப்போம் எனப் பாகிஸ்தான் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.