ஆப்கானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்களால் சமீபத்தில் ஜலாலாபாத் என்ற முக்கிய நகரும் கைப்பற்றப் பட்டதுடன் தலைநகர் காபூலும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் 20 வருடங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் ஆப்கான் மண்ணில் நுழைய முன்பு அங்கு ஆட்சி எவ்வாறு தலிபான்களின் கையில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே நிலை மறுபடியும் தோன்றவுள்ளது.
ஆப்கானில் உள்ள 421 மாவட்டங்களில் சுமார் 400 மாவட்டங்கள் வரை தலிபான்கள் கைப்பற்றி விரைவில் அதிகாரத்துக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி விரைவில் பதவி விலக வேண்டும் என்றும் அவரது ஆட்சியில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்றும் தலிபான்கள் மீண்டும் உறுதியாக உள்ளனர். காபூலைக் கைப்பற்றி அஷ்ரப் கனியை பதவியில் இருந்து அகற்றும் வரை நாம் ஓய மாட்டோம் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மாகாண தலைநகரங்கள், எல்லைகள், விமான நிலையங்கள், தூதரகங்கள் என்பன ஏற்கனவே சென்று விட்டன. ஜலாலாபாத்தை நெருங்கிய போது பேச்சுவார்த்தை நடத்திய ஆப்கான் அரச படைகள் பின்பு சரணடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் 7 நாட்களில் ஆப்கான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்படுத்தி விடுவர் என்று பரவலாக எதிர்பார்க்கப் படுகின்றது. ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம், அதனால் ஏற்படும் மனித உரிமைகள் மீறல்கள், பாதிக்கப் பட்டு அகதிகளாக வெளியேறி வரும் பல இலட்சக் கணக்கான மக்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ், தலிபான்களால் வலிந்து ஏற்படுத்தப் படும் வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மறுபுறம் ஆப்கானில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.