கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சூடானின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மீண்டும் பதவியில் அமர்த்தப்படவுள்ளார்.
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அண்மைக்காலமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரத்தில் 40 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
1989 ஆம் ஆண்டிலிருந்து சூடான் நாட்டை ஒமர் அல்-பஷீர் ஆட்சி செய்து வந்தார். ஆனால் சூடான் ராணுவத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு அவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதோடு ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களை பிரதிநிதிகளாக கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் என்பவர் பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் திகதி ராணுவம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி அந்த அரசை கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாடு முழுவதும் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இராணுவம், சிவில் தலைவர்கள் மற்றும் முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையிலான புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் மத்தியஸ்தர்கள் தெரிவித்தனர். மேலும் ஹாம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த சூடானின் இராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.