திங்கட்கிழமை சூடானில் இடைக்கால அரசிடம் இருந்து அந்நாட்டு இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றமும் வன்முறையும் ஏற்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கும், வீதியில் இறங்கிய ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டு 7 பேர் கொல்லப் பட்டதாகவும், 140 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட நாடான சூடான் ஒரு இஸ்லாமிய தேசமாகும். இங்கு இதுவரை ஆட்சி செய்த பிரதமர் அப்துல்லா ஹம்டொக் இராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதுடன் இடைக்கால அரசைக் கலைத்துள்ள இராணுவம் சூடானில் அவசர நிலையையும் பிரகடனப் படுத்தியுள்ளது. சூடானை 30 வருடங்களாக ஆட்சி செய்த அதிபர் உமர் அல் பஷீர் மக்களின் தொடர் போராட்டத்தால் 2019 இல் பதவி விலகினார். இதன் பின் பொது மக்களும், இராணுவமும் இணைந்த ஆட்சி அங்கு நடைபெற்று வந்தது.
இதன் பிரதமராக அப்துல்லா ஹம்டொக் பதவி வகித்து வந்தார். தற்போது இவரையும், அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களையும் கைது செய்துள்ள சூடான் இராணுவம் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்ற நீண்ட காலமாகவே முயன்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சூடான் தலைநகருக்கு செல்லும் பாதைகள் தற்போது அடைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் சூடான் இராணுவத் தலைமை அதிகாரி புர்ஹான், 2023 ஜூலை மாதம் சூடானில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்தப் பட்டு ஆட்சிப் பொறுப்பு தேர்வு செய்யப் படும் மக்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப் படும் என வாக்குறுதி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.