தெற்கு சோமாலியாவின் டைன்சூர் நகரில் உள்ள இராணுவத் தளத்தின் மீது சமீபத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்த முயன்ற தாக்குதல் முறியடிக்கப் பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த தீவிரவாதிகள் இராணுவ தளத்தைச் சுற்றி வளைத்தவாறு தாக்கத் தொடங்கினர். ஆனால் விரைவாக இராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் தொடுத்தனர்.
இந்தத் துரிதமான தாக்குதலில் 24 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதுடன், பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் தீவிரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப் பட்டது. இதேவேளை 2020 ஆமாண்டு உலகம் முழுதும் இடம்பெற்ற ஆயுதம் தாங்கிய வன்முறைகளிலும், பாலியல் துஷ்பிரயோகங்கள், கடத்தல் போன்றவற்றுக்கும் குறைந்தது 26 425 சிறுவர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐ.நா சபை உறுதிப் படுத்தியுள்ளது.
ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் வெளியிட்ட அறிக்கையில், கொங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், சோமாலியா, சிரியா மற்றும் யேமென் ஆகிய நாடுகளில் தான் மிக அதிகளவு சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.