உலகம் முழுவதும் கோவிட் இன் புதிய மாறுபாடான ஒமிக்ரோனின் வேகமான பரவுகை காரணமாக பல ஆயிரக் கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகி பொருளாதாரத்தில் மீண்டும் பெரும் தாக்கம் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சீனாவிலோ குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே இருக்கும் பட்சத்தில் அங்கு மீண்டும் சடுதியாக கோவிட் தொற்றுக்கள் சற்று அதிகரித்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
உள்ளூரில் பரவிய 158 தொற்றுக்களுடன் சுமார் 206 புதிய கோவிட் தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக சீன சுகாதார கமிசன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. 2022 ஆமாண்டு பெப்ரவரியில் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் 157 தொற்றுக்கள் ஷாங்ஷி மாநிலத்திலும் குவாங்ஸி மாகாணத்தில் 1 தொற்றும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சீன அரசு ஏற்கனவே தனது நாட்டில் பூச்சிய கோவிட் தொற்று கொள்கை மூலம் தீவிர கட்டுப்பாடுகளை அமுல் படுத்தி வருகின்றது. இதில் கடுமையான சர்வதேச விமானப் பயணத் தடையும் அடங்குகின்றது. டியான்ஜின் என்ற நகரத்தில் டிசம்பர் 13 ஆம் திகடி ஒரு ஒமிக்ரோன் தொற்று இனம் காணப் பட்டதாகவும், அதைத் தொடர்ந்து வேறு சில தொற்றுக்கள் ஏற்பட்டதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்த போதும், தற்போது இது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனால் சீன சுகாதார கமிசன் தகவல் படி சீனாவில் சனிக்கிழமை வரையிலான புள்ளி விபரப்படி மொத்தம் சுமார் 2011 ஆக்டிவ் தொற்றுக்களும் இதில் 9 மோசமான நிலையில் உள்ளவர்களும் உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. புதிதாக யாரும் இறந்ததாகத் தகவல் இல்லை என்பதுடன் சுமார் 76 கோவிட் நோயாளிகள் சனிக்கிழமை மாத்திரம் வைத்திய சாலையில் இருந்து விடுவிக்கப் பட்டதாகவும் தெரிய வருகின்றது.