சமீபத்தில் கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை சடுதியாக உயர்ந்ததைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம் கடும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.
பொது மக்களுக்கும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலிசாருக்கும் இடையே வன்முறை வெடித்ததை அடுத்தே இது நிகழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் நாடு முழுதும் அவசர நிலையும் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. இதேவேளை முன்னால் சோவியத் யூனியனில் அங்கம் வகித்து ரஷ்யாவுக்கு நெருங்கிய நாடாக கஜகஸ்தான் விளங்குவதால் அங்கு மக்கள் வன்முறையைக் கட்டுப்படுத்த ரஷ்யா கலவரத் தடுப்பு துருப்புக்களை அனுப்பியுள்ளது. அல்மாட்டி நகர போலிசார் கருத்துத் தெரிவிக்கும் போது வியாழக்கிழமை அதிகாலை வரை நடந்த வன்முறையில் சுமார் 12 ஆர்ப்பாட்டக் காரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சிகரமான தகவலாக இந்த வன்முறையில் குறைந்தது 18 பாதுகாப்புப் படையினர் பலியாகியுள்ளதாகவும், இதில் இருவர் தலை துண்டிக்கப் பட்டுள்ள நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சுமார் 2000 இற்கும் அதிகமான மக்கள் கைது செய்யப் பட்டும் உள்ளனர்.
நகரிலுள்ள அதிபர் இல்லம், மேயர் அலுவலகம் மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. ஆயினும் அல்மாட்டியிலுள்ள பிரதான விமான நிலையம் இராணுவத்தினரால் மீளக் கையகப் படுத்தப் பட்டுள்ளது. கஜகஸ்தான் சுதந்திரமடைந்த கடந்த 30 வருடங்களில் அது சந்தித்துள்ள மிக மோசமான வன்முறை இதுவாகும். இந்நிலையில் இதில் தற்போது ரஷ்யத் தலையீடானது எண்ணெய் மற்றும் யுரேனியம் வளம் மிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானை ஆக்கிரமிப்பதற்காக இருக்கும் என்ற அச்சம் மேற்குலகத்திடம் ஏற்பட்டுள்ளது.