2021 ஆமாண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தின் ஜெசேரோ என்ற பள்ளத் தாக்கில் நாசாவின் பெர்செவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
தற்போது அங்கு மிக முக்கியமான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பெர்செவரன்ஸ் ரோவர் இறங்கியுள்ள இந்த ஜெசேரோ என்ற பள்ளத்தாக்கானது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அனுப்ப வல்ல மிகச் சரியான ஒரு இடமாகும் என நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நாசாவின் வருங்கால விண்வெளி செயற்திட்டங்களில் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் விளங்கும் திட்டங்களில் ஒன்று இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாயில் சேகரிக்கும் மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவதாகும். ஏற்கனவே செவ்வாயின் மேற்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் குறித்து இதுவரை இல்லாதளவு துல்லியமான புகைப்படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.
இப்புகைப்படங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வரும் நாசா விஞ்ஞானிகள் இப்பள்ளத்தாக்குப் பகுதியில் முன்பு நீர் நிலைகள் இருந்தமைக்கான ஆதாரம் இருப்பதாகவும் உறுதியாக நம்புகின்றனர். இது தொடர்பில் புளோரிடாவில் உள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கல செயற்பாடுகளை வழிநடத்தும் தலைமை வானியலாளர் எமி வில்லியம்ஸ் இவ்வாறு கூறினார். 'ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பிலுள்ள பாறைகளது அம்சங்களுக்கும், பூமியிலுள்ள நதிகளது டெல்டாக்களின் வடிவங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
இதன் மூலமான கணிப்பின் படி சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீரோட்டம் இருந்திருக்கலாம். இது தொடர்பான மேலதிக உறுதியான ஆதாரங்களைத் திரட்ட ஏற்ற இடங்களுக்கு பெர்சவரன்ஸ் ரோவர் வண்டி அனுப்பப் படும்.' இவ்வாறு எமி வில்லியம்ஸ் தெரிவித்தார்.