பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவினால் கிட்டத்தட்ட 22 பேர் பலியானது அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள முர்ரீயில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்திருந்தது.
ஆயினும் ஜனவரி 3 ஆம் திகதி முதற் கொண்டே பிரபல சுற்றுலாத் தலமான இப்பகுதிக்கு இலட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை முதல் முர்ரேயில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நகர முடியாத படி அடர்த்தியான பனிப்போர்வையில் சிக்கிக் கொண்டன. இதைத் தொடர்ந்து ராவல்பிண்டி - முர்ரீ இடையேயான சாலை மூடப் பட்டு, வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடங்கப் பட்டது.
இப்பகுதி பேரிடர் பகுதியாகவும் அறிவிக்கப் பட்டது. சாலையில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகளை அகற்றி வாகனங்கள் நகர முயற்சி செய்யப் பட்ட போது பனியில் மூடப் பட்டிருந்த கார்களில் மூச்சுத் திணறி 9 சிறுவர்கள் உட்பட 21 பேர் பலியாகி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத் அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.