அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக டோக்கியோவுக்கு அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவிக்கவுள்ளது.
இதனால் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாது நடைபெறும் என்று தெரிய வருகின்றது. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் அடங்கலாக இந்தியாவைச் சேர்ந்த 120 இற்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் டோக்கியோவில் தினசரி தொற்றுக்கள் 920 ஆக உயர்ந்துள்ள காரணத்தினால் அங்கு அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று வியாழன் அல்லது நாளை எடுக்கப் படவுள்ளது. ஜப்பானில் இதுவரை 810 000 மேற்பட்ட கொரோனா தொற்றுக்களும், 14 900 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை பிரிட்டனில் ஜனவரிக்குப் பின் முதன் முறையாக தினசரி தொற்றுக்கள் 30 000 இற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கும் எஞ்சியுள்ள அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்க பிரிட்டன் அரசு தயாராகி வரும் நிலையில் இந்தப் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
ஜனவரி 23 இற்குப் பின் பிரிட்டனில் முதன்முறையாக புதன்கிழமை மிக அதிகளவில் 32 548 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக வசந்த காலத்தில் இந்தத் தொற்றுக்கள் 5000 இற்கும் குறைவாக இருந்த நிலையில், இந்தியாவில் அடையாளம் காணப் பட்ட டெல்ட்டா மாறுபாடு இங்கிலாந்திலும் பரவியதன் காரணமாக இந்தத் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறும் போதும் ஜூலை 19 ஆம் திகதி எஞ்சியிருக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளும் தளர்த்தப் படும் என பிரிட்டன் அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.