பெரு தலைநகர் லிமாவின் கிழக்கே கஹமர்கீலா என்ற இடத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று அகழ்வாராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த மம்மி இன்கா நாகரிகத்துக்கு முந்தையது என்றும் கூறப்படுகின்றது. மேலும் அகழ்ந்தெடுக்கப் பட்ட போது இதன் முகம் கைகளால் மூடப்பட்டு கைகள் கட்டப் பட்ட நிலையில் இருந்துள்ளது.
சக்லா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த ஆதிகால சமூகத்தை சேர்ந்த ஒரு நபரின் மம்மியாக இது இருக்கக் கூடும் என ஊகிக்கப் படுகின்றது. கை கால்கள் கட்டப் பட்டு அமர்ந்த நிலையில் இருந்த இந்த மம்மியுடன், பானை, சிறிய வடிவிலான குடுவைகள் மற்றும் உணவு, தானியங்கள் போன்றவையும் இருந்துள்ளன.
இந்த மம்மியின் வயதை துல்லியமாக அறிய நவீன ரேடியோ கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்தப் படவுள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் இன்கா நாகரிக்கத்தின் இன்கா பேரரசு நிறுவப் பட்டது என்பதும் ஆனால் இந்த மம்மி அதற்கும் முற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மம்மியின் உடல் ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
சுமார் 800 - 1200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படும் இந்த மம்மியின் உடலானது இந்நபர் இறந்த பின்பும் வானுலக வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதற்குத் தேவை என்ற நம்பிக்கை அடிப்படையில் பயன்பாட்டு மற்றும் உணவுப் பொருட்களும் புதைக்கப் பட்டுள்ளன என்று தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.