உலகில் அருகி வரும் இனங்களில் ஒன்றான சிம்பன்ஸிக்களில் மிக வயதான சிம்பன்ஸி வட அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ விலங்குகள் காப்பகத்தில் மரணமடைந்துள்ளது.
கொபி என்று பெயரிடப் பட்டுள்ள இந்த சிம்பன்ஸி மரணிக்கும் போது அதன் வயது 63 ஆகும். கொபி 1960களில் இந்த விலங்குகள் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
கொபி மரணமடைந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை என்று கூறும் விலங்குகள் காப்பக அதிகாரிகள், இது சமீபத்தில் நோய் வாய்ப் பட்டிருந்ததாகவும், இது மரணிப்பதற்கு அதன் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இயற்கையில் உயிரினப் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் பட்டியலில் சிம்பன்ஸிக்கள் அருகி வரும் ஆபத்தை சந்திக்கும் உயிரினமாக சேர்க்கப் பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இவை வேட்டையாடப் படுதல், வாழ்விடம் இல்லாது போதல் மற்றும் நோய் போன்ற காரணிகளால் அழிவடையும் அபாயத்தில் இருந்து வருகின்றன.
உலகில் மொத்தமாக இருக்கும் 100 000 இலிருந்து 200 000 வரையிலான சிம்பன்ஸிக்களின் சராசரி ஆயுட்காலம் 33 வருடங்களாகும். ஆனால் விலங்குகள் காப்பகத்தில் மனிதர்களின் கண்காணிப்பின் கீழ் இவை 50 தொடக்கம் 60 வயது வரையும் வாழ்கின்றன. இந்நிலையில் சான்பிரான்ஸிஸ்கோ விலங்குகள் காப்பகத்தில் நீண்ட காலமாக வசித்து வந்த கொபி அங்கு பலரது கவனத்தையும் ஈர்த்து, பலரின் அபிலாஷையைப் பெற்ற சிம்பன்ஸியாக விளங்கி வந்தது.
இதனால் இதன் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று என விலங்குகள் காப்பக அதிகாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.