தெற்காசிய நாடுகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஒருமித்த கருத்து இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
வருகின்ற 25 ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்த சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டை இம்முறை நேபாளம் தலைமை ஏற்க இருந்தது. இந்நிலையில் இந்த மாநாட்டில் தலிபான் பிரதிநிதிகளையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதற்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பை தெரிவித்திருந்ததோடு இதன் தொடர்பில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அத்தோடு மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்காக வெற்று இருக்கை ஒன்றை வைக்கலாம் எனவும் பெரும்பாலான நாடுகள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.