காசாப் பகுதியில், இஸ்ரேலிய இராணுவம் நடாத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை, கிட்டத்தட்ட 3,500 குழந்தைகள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறான தாக்குதலில் 2,136 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் 8,306 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 21,048 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குண்டுத் தாக்குதல்களினாலும், 25 மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன எனவும் மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸால் பணயக்கைதியாகக் கடத்தப்பட்ட 22 வயதான ஜேர்மன்-இஸ்ரேலியப் பெண்ணான ஷானி லூக் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அவரது குடும்பத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதுவரை 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் இத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தரைவழித் தாக்குதலைத் தொடரும், இஸ்ரேலிய துருப்புக்கள் காசா நகரை நோக்கி முன்னேறி சஜயா மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, கத்தார், எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய தரப்புக்கள் அமெரிக்காவுடன் இணைந்து - காசா பகுதியிலிருந்து, ரஃபா வழியாக எகிப்திற்குள் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பணயக்கைதிகளையும், மற்றும் தீவிரமான உடல்நிலை மோசமாக உள்ளவர்களையும் விடுவிக்கும் ஒரு ஒப்பந்தம் நேற்று செவ்வாய்கிழமை சாத்தியமாகியுள்ளது.
இந்த ஒப்பத்தத்தினைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை காலை 40 எகிப்திய ஆம்புலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடக்கும் வாயிலுக்கு விரைந்துள்ளதாக, வடக்கு சினாயில் உள்ள எகிப்திய செஞ்சிலுவைச் செயலாளர் ஜெனரல் ரேட் அப்தெல் நாசர் தெரிவித்துள்ளார். இந்த அம்புலன்களில் பலத்த காயமடைந்த 81 பேர் எகிப்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரஃபாவில் உள்ள எல்லையை கடந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, ஹமாஸை முற்றாக அழிப்பது எனும் திட்டத்துடன் உள்ள உள்ள இஸ்ரேலிய அரசாங்கம், இந்தப் போர் இன்னும் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.