இன்று திங்கட்கிழமை ஜப்பானின் நாகசாகி நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான 76 ஆவது நினைவு தினத்தை அனுட்டிக்கின்றது.
2 ஆம் உலகப் போரின் இறுதியில் சரியாக ஜப்பான் நேரப்படி இன்று காலை 11:02 மணிக்கு, அமெரிக்காவின் B-29 பொம்பர் விமானம் நாகசாகியில் போட்ட புளூட்டோனியம் அணுகுண்டால் கிட்டத்தட்ட 70 000 இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின.
3 தினங்களுக்கு முன் ஹிரோஷிமா நகரில் போடப்பட்ட உலகின் முதல் அணுகுண்டால் சுமார் 140 000 இற்கும் அதிகமான உயிர்கள் பலியாகி இருந்தன. இந்நிலையில் இந்தவிரு நகரங்களிலும் அனுட்டிக்கப் படும் நினைவு தினமானது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகள் அணுவாயுதங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதை தடுக்க கோரிக்கை வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனது சொந்த அணுவாயுதங்களைக் கொண்டு வடகிழக்கு ஆசிய நாடுகளையும் பாதுகாப்போம் என அமெரிக்கா உத்தரவாதம் அளிக்காத நிலையில், இப்பகுதியில் அணுவாயுதங்கள் அற்ற வலயத்தை உருவாக்க ஜப்பான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாகசாகி மேயர் டொமொஹிசா டாவுயே தனது உரையின் போது வற்புறுத்தியுள்ளார்.
சரியாக 11:02 மணிக்கு நாகசாகியில் மக்கள் அனைவரும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அடுத்தடுத்து இரு அணுகுண்டுத் தாக்குதல்களால் நிலைகுலைந்த ஜப்பான் ஆகஸ்ட் 15 ஆம் திகதி 1945 ஆமாண்டு சரணடைந்ததை அடுத்து 2 ஆம் உலகப் போர் முடிவுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2017 ஆமாண்டு உருவாக்கப் பட்ட அணுவாயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுமாறு நாகசாகி மேயர் ஜப்பான் அரசுக்கும், சட்ட வல்லுனர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.