செப்டம்பர் 19 ஆம் திகதி ஸ்பெயினின் கேனரி தீவுகளிலுள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 85 000 பொது மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு பலர் வெளியேற நேர்ந்தது.
இந்நிலையில் தற்போது இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய குழம்பு கடலில் கலக்கத் தொடங்கியுள்ளது.
செவ்வாய் மாலை அட்லாண்டிக் பெருங்கடலின் டிஜாரபே எனப்படும் பகுதியில் இந்த நெருப்புக் குழம்பு கடலில் கலந்தது. கடந்த 50 ஆண்டுகளில் 2 ஆவது முறையாக சீற்றம் அடைந்துள்ள இந்த எரிமலையின் குழம்பு கடலில் கலந்திருப்பதால் ஆபத்தான வாயுக்கள் காற்றில் பரவலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு பொது மக்கள் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்று வரும் இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுவீடனின் பிரபல சுற்றுச் சூழல் தன்னார்வலரான 18 வயதாகும் கிரேட்டா தன்பெர்க் சர்வதேச நாடுகளின் தலைவர்களைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.
இதுவரை பல மாநாடுகள் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக இளம் தலைமுறையினர் கோரிக்கை வைத்து வந்த போதும் சர்வதேசம் இதுவரை உறுதியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வெறுமனே 30 வருடங்களாகப் பேசிக் கொண்டேயிருப்பதாக அவர் சாடினார். மனிதர்கள் வாழ இந்த ஒரே ஒரு பூமி தான் உள்ளது என்றும் இதனைப் பாதுகாப்பதே இப்போது நமக்கிருக்கும் ஒரே வழி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மிலான் மாநாட்டில் 190 நாடுகளைச் சேர்ந்த இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.