புதன்கிழமை அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் 15 வயது மாணவர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப் பட்டும், 8 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
மிச்சிகன் மாகாணத்திலுள்ள ஆக்ஸ்போர்டு என்ற நகரில் அமைந்திருக்கும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தான் இந்த மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரமும், பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கியால் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அமெரிக்காவில் இன்றைய நிலையிலும் துப்பாக்கிகள் வாங்க மிகத் தீவிரமான கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த ஆண்டு பள்ளி வளாகங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தான் மிக மோசமானதாகும். கொல்லப் பட்ட 3 மாணவர்களும் 20 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதுடன், காயமடைந்த 8 பேரில் ஒரு ஆசிரியரும் அடங்குகின்றார். இந்த வன்முறையை நிகழ்த்திய பின் குறித்த மாணவன் போலிசாரிடம் சரணடைந்துள்ளான். துப்பாக்கிச் சூட்டின் பின்னணி இன்னமும் தெரியவில்லை. தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
சம்பவத்தில் கொல்லப் பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் பைடென், மிச்சிகன் ஆளுனர் கிரெட்சென் விட்மர் உட்பட தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.