மலேசியப் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தனது பதவியைத் துறந்துள்ளார்.
இவரது ராஜினாமாவை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியிருந்த இவர் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தவறியதால் தான் பதவி விலக வேண்டி ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் புதிய பிரதமர் தேர்வாகும் வரை மொஹிதின் யாசின் இடைக்கால பிரதமராகத் தொடர்ந்து சேவையாற்ற மன்னரால் அனுமதி அளிக்கப் பட்டுள்ளார். மலேசியாவின் பிரதமராக இவர் நீடித்த 17 மாதங்களில், அண்மையில் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் அபிவிருத்தி இலக்குகளை எட்டத் தவறியதற்காகவும் இவர் பெரும்பான்மை பலத்தை இழந்தார்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் தான் சரியான தெரிவு எனத் தான் கருதவில்லை என்று மன்னர் மாளிகை தெரிவித்திருப்பதுடன் மொஹிதின் தன்கீழ் பணிபுரிவது மகிழ்ச்சியே என்றும் மன்னர் அல் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மலேசியா தற்போது கோவிட் பெரும் தொற்று, பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவு, மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இதைக் கையாளக் கூடிய புதிய பிரதமருடன் கூடிய அரசு விரைவில் அமைக்கப் படும் எனத் தான் நம்புவதாக மொஹிதின் யாசின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.