சீனாவின் வடமேற்கே மொங்கோலியாவுடனான எல்லையிலுள்ள எஜின் என்ற மாவட்டத்தில் புதிய வகை கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமா 35 700 மக்கள் தொகை கொண்ட பகுதியில் முழுமையான லாக்டவுனை சீன அரசு அமுல் படுத்தியுள்ளது.
கடந்த வாரம் மட்டும் 150 இற்கும் அதிகமான தொற்றுக்கள் இனம் காணப் பட்டதை அடுத்து வீடுகளை விட்டு யாரும் மறு அறிவித்தல் வரை வெளியே வரக் கூடாது என்ற கடுமையான சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மீறுபவர்கள் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படுவர் என்றும் தெரிய வருகின்றது. ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 11 மாகாணங்களில் இது பரவியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார கமிசன் அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன் திங்கள் மாத்திரம் 38 தொற்றுக்கள் இனம் காணப் பட்டதாகவும், இதில் பாதிப் பேர் உள் மொங்கோலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக பீஜிங்கில் சமீபத்தில் தேசிய சுகாதார கமிசனின் அதிகாரியான வூ லியாங்யௌ விளக்கம் அளிக்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கள் யாவும் வெளிநாட்டில் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப் பட்டு இடம்பெயர்ந்தவர்களிடம் இருந்தே ஏற்பட்டுள்ளது என்றுள்ளார். சீன மக்கள் தொகையில் 84% வீதமானவர்களுக்குக் கோவிட் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ள போதும் டெல்டா மாறுபாட்டால் சமீபத்தில் தொற்றுக்கள் அதிகரித்திருப்பதால் கோவிட் கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து கடந்த வாரம் சீனா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.