இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பானின் இளவரசியாரான மாக்கோ தனது நீண்ட நாள் காதலனை உத்தியோகபூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன் மூலம் அவர் ஜப்பான் நாட்டு அரச நடைமுறையின் பிரகாரம் அரச அந்தஸ்தை இழந்துள்ளார்.
இளவரசி மாக்கோவுக்கும் அவரது காதலரின் தாயாருக்கும் இடையேயான நிதி விவகாரம் காரணமாக இவர்களது திருமணம் 3 வருடங்கள் தள்ளிப் போனதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இவர்களது உத்தியோகபூர்வ திருமண சான்றிதழ் ஜப்பான் அரச மாளிகைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
கெய் கொமுரோ என்ற பெயருடைய இளவரசியின் காதலரின் பெயரில் இருந்து பெறப்பட்ட பகுதியைச் சேர்த்து இளவரசி தனது பெயரை மாக்கோ கொமுரோ என்று மாற்றியிருப்பதும் பலரை வியக்க வைத்துள்ளது.
சமீப காலமாக இளவரசியார் குறித்தும் அவரது கணவர் கொமுரோ குறித்தும் ஜப்பானிய ஊடகங்கள் எதிர்மறையான பல விமரிசனங்களைப் பரப்பி வந்ததால் இளவரசி மாக்கோ கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தற்போது தேறியிருப்பதாகவும் அவரின் தனிப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது திருமணத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு தான் 30 வயதை எட்டிய இளவரசி மாக்கோ தனது திருமணத்துக்காக அரச மாளிகையினால் அன்பளிப்பாக வழங்கப் பட்ட $1.23 டாலர் பெறுமதியான சீதனத்தையும் புறக்கணித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.