இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இன்று செவ்வாய்கிழமை மாலை இஸ்ரேலிய இராணுவம் இதனைத் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அலாரம் சைரன்கள் இயக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உத்தரவின் பேரில், இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் டஜன் கணக்கான ஏவுகணைகளை வீசியதாக கூறுகின்றனர். இஸ்ரேலிய உள்ளூர் ஊடகங்களின் தகவற்படி குறைந்தது நூறு ஏவுகணைகள் வீசப்பட்டிருந்தன.
இஸ்ரேலிய இராணுவம் இஸ்லாமிய இயக்கமான ஹெஸ்பொல்லாவைத் தாக்குவதாகக் கூறி, தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களுக்கு எதிராக திங்கட்கிழமை மாலை தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஐ.நா. அமைதி காக்கும் படையினருக்கு "லெபனான் பிராந்திய இறையாண்மையை மீறுவம் செயல் " என அவசர முறையீடு செய்யப்பட்டது.
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஈராக்கும் தனது வான்வெளியைடி மூடியது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலை நோக்கி டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியது. மேலும் இஸ்ரேலின் பதில் தாக்குதல் நடந்தால், மேலும் ஏவுதல்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
ஈரான் ஏவுகணைகளில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க தயார் எனவும், தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தற்காத்துக் கொள்ளவும், அப்பகுதியில் இருக்கும் அமெரிக்க படைகளை பாதுகாக்கவும் அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
லெபனானில் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, காசாவில் உள்ள பொதுமக்களின் நிலைமை மேலும் மோசமடைவதாகவும், மத்திய கிழக்கில் மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சுவிஸ் தொண்டுநிறுவனம் தனது முயற்சிகளை தீவிரப்படுத்துவதாகவும் அறியவருகிறது.
லெபனானில் உள்ள தெஹ்ரானின் ஹிஸ்பொல்லா கூட்டாளிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சில நிமிடங்களுக்கு முன்பு, ஈரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய பின்னர், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "மத்திய கிழக்கு மோதலை விரிவுபடுத்துவதை" கண்டித்தார்.