ஜப்பானின் மிகப் பிரபலமான சுற்றுலா மற்றும் ஹைக்கிங் எனப்படும் மலையேறு வீரர்களின் ஸ்தலங்களில் ஒன்று டோக்கியோவுக்கு அருகே அமைந்திருக்கும் ஃபுஜி என்ற புனித எரிமலை ஆகும்.
இங்கு கடந்த ஒரு வருடமாக கொரோனா பெரும் தொற்று காரணமாக மலையேறு வீரர்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை.
கடந்த வருடம் கோடைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கும், மலையேறு வீரர்களுக்கும் மூடப் பட்ட இந்த ஆக்டிவ் எரிமலை இம்மாதம் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக சனிக்கிழமை காலை சுமார் 100 மலையேறு வீரர்கள் இந்த ஃபுஜி எரிமலையில் ஹைக்கிங் செய்வதற்காக மலையடி வாரத்தில் ஒன்று கூடியுள்ளனர். வெறுமனே மலையேறுவதற்கு மாத்திரமன்றி இந்த ஃபுஜி எரிமலை புனிதமானது என்றும் வணங்கத் தக்கது என்றும் பெரும்பாலான ஜப்பானியர்களால் நம்பப் படுகின்றது.
3776 மீட்டர் உயரம் கொண்ட இந்த மிகப் பெரிய ஃபுஜி எரிமலை தனியாக மத்திய டோக்கியோவில் இருந்து 2 மணித்தியாலத் தொலைவில் அமைந்துள்ளது. இறுதியாக 1707 ஆமாண்டு ஃபுஜி எரிமலை வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுவதுடன் இது மீண்டும் முழு உத்வேகத்துடன் சீறினால் டோக்கியோ முழுதும் கடும் சாம்பல் புகை ஏற்படும் என்றும் இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட வேண்டி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே கோவிட்-19 பெரும் தொற்றால் ஒரு வருடம் தள்ளிப் போடப் பட்ட ஒலிம்பிஸ் போட்டிகள் தற்போது டோக்கியோவில் பார்வையாளர்கள் இன்றி இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
மத்திய சீனாவை அண்மையில் புரட்டிப் போட்ட வெள்ள அனர்த்தம் ஓய்வதற்குள் கிழக்கு சீனாவை இன் ஃபா என்ற தைபூன் புயல் தாக்க வரவிருப்பதாகவும் இதனால் ஷங்காய் நகரின் இரு முக்கிய சர்வதேச விமான நிலையங்களது அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.