சனிக்கிழமை காலை ஹைட்டி தீவை உலுக்கிய மிகவும் சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்துக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1300 ஐ எட்டியிருப்பது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நில நடுக்கம் மிகப் பெருமளவு பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக உலகின் பல நாடுகளில், பருவ நிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் பல இயற்கை அனர்த்தங்கள் மாறி மாறி தாக்கி வருகின்றன. கால நிலை மாற்றத்துடன் நேரடித் தொடர்பு இல்லா விடினும் இம்முறை ஹைட்டியைத் தாக்கியுள்ள பூகம்பமும் மிகத் தீவிரமான ஒன்றாகவே உள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியின் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது 6.9 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், இதன் போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஹைட்டி நிலநடுக்கத்தினால் பல்லாயிரக் கணக்கான வீடுகளும், கட்டடங்களும் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இதுவரை 5700 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஹைட்டி இராணுவத்துடன், பொது மக்களும் கை கோர்த்துள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹைட்டியில் ஒரு மாதத்துக்கு அவசரகால நிலையை அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி பிரகடனப் படுத்தியுள்ளார். ஹைட்டி நிலநடுக்கத்தில் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட நகரம் கடற்கரை நகரான லெஸ் கெயெஸ் ஆகும். ஏற்கனவே கோவிட் பெரும் தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப் பட்ட ஹைட்டியில், அண்மையில் அதிபர் படுகொலை போன்ற சோக சம்பவங்கள் அரங்கேறியிருந்த நிலையில் அடுத்த பேரிடியாக இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
இதுதவிர வெகு விரைவில் ஹைட்டியை வெப்ப மண்டல புயலும் தாக்கக் கூடுமென USGS எச்சரித்துள்ளது.